உலகிலேயே 'இந்தியா' மிகவும் சகிப்பு தன்மை கொண்ட நாடு
உலகிலேயே இந்தியா மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-
மதசார்பின்மை பாதுகாப்பு
நமது நாடும், நாட்டு மக்களும் பல்வேறு துறைகளில் மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறார்கள். அதனை மறைத்து விட்டு மேற்கத்திய ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நமது நாட்டில் வறுமை, பாலின வேறுபாடுகள் உள்ளிட்ட சில சவால்கள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். உலகிலேயே இந்தியா மிகவும் சகிப்பு தன்மை கொண்ட நாடாகும்.
நமது நாட்டில் மதசார்பின்மை பாதுகாப்பாக உள்ளது. இது இந்த அரசாலோ, ஒரு கட்சியாலோ இல்லை. மதசார்பின்மை ஒவ்வொரு மக்களின் ரத்தத்தில் உள்ளது. ஒவ்வொரு தனிமனித நரம்புகளிலும் உள்ளது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் உயர் பதவிகளை அடையலாம். அனைத்து தரப்பு பிரிவுகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் இது இல்லை.
தேசிய கல்வி கொள்கையில்...
ஒவ்வொரு மதமும், சிறப்பு வாய்ந்தது. நாம் கவனம் செலுத்த வேண்டியது மதம் இல்லை. மதம் தனிப்பட்ட வழிபாட்டு முறை ஆகும். நமது கலாசாரம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் தாய் மொழியை பற்றி பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது அடிப்படை கல்வி தாய் மொழில் இருக்க வேண்டும். தாய் மொழியால் புரிந்து கொள்வதற்கும், மற்றவர்களை தொடர்பு கொள்வதும் எளிதாக இருக்கும். புதிய தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சம உரிமை
எனவே ஆரம்ப கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டும். மற்ற மொழிகளை கற்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆங்கில மொழி தெரிந்திருந்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் தவறாக பதிந்துள்ளது.
நாட்டில் 50 சதவீத பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு சமுதாயத்தில் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நான் வருகிற ஆகஸ்டு 11-ந் தேதி துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். ஆகஸ்டு 15-ந்தேதி நமது நாட்டுக்கு சுதந்திர தினம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.