பெங்களூருவில் 7 ஆண்டுகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண் என்ஜினீயர் சாவு
பெங்களூருவில் 7 ஆண்டுகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண் என்ஜினீயர் உயிரிழந்தார்.
பெங்களூரு:
டெல்லியை சேர்ந்தவர் பூனம் ராணா (வயது 35). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்தார். மேலும் கேரளாவை சேர்ந்தவரும், பெங்களூருவில் வசித்து வருபவருமான ரிஜேஷ் நாயர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வயிற்று வலியால் அவதிப்பட்ட பூனம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வயிற்றில் சில பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூனத்திற்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனாலும் பூனத்தின் உடல்நிலை சரியாகவில்லை. மாறாக அவர் கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருக்கு 7 ஆண்டுகளாக நினைவு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நினைவு திரும்பாமலேயே பூனம் உயிரிழந்தார். பூனத்தின் மருத்துவ சிகிச்சைக்காக ரிஜேஷ் ரூ.9 கோடி வரை செலவு செய்து உள்ளார். ஆனாலும் பூனம் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.