விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்-மந்திரி சோமண்ணா பேச்சு
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்:
விவசாயிகள் போராட்டம்
சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இதுபற்றி அறிந்த வீட்டு வசதித்துறை மந்திரியும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான
வி.சோமண்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
சாமுண்டீஸ்வரி மின்வாரிய கழகம் விதித்துள்ள மின்கட்டண உயர்வு குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. எனது அனுமதி இல்லாமல் மின்கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க முடியாது. இதில் ஏதோ தவறு நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகள் முன்வைத்துள்ள அனைத்து கோரிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே விவசாயிகள் போராட்டம் நடத்தும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலவச வீடுகள்...
இதற்கிடையே சாம்ராஜ்நகர் அரசு பி.யூ.கல்லூரியில் வீட்டு வசதித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட வீட்டு வசதித்துறை மந்திரி வி.சோமண்ணா பேசியதாவது:-
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 21 குடிசைப்பகுதிகள் உள்ளது. இதில் 3 குடிசைப்பகுதிகள் அரசு நிலத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள 24 ஆயிரம் பேருக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்படும். மேலும் குடிசை மாற்று வாரியப்பகுதியில் குடிநீர், சாலைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதேபோல் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.