பெங்களூருவில் பதுங்கி இருந்த அல்-கொய்தா பயங்கரவாதி கைது


பெங்களூருவில் பதுங்கி இருந்த அல்-கொய்தா பயங்கரவாதி கைது
x

பெங்களூருவில் 7 ஆண்டுகள் பதுங்கி இருந்த அல்-கொய்தா பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை

வங்காளதேசத்தை சேர்ந்தவர் பைசல் அகமது. இவர் அல்-கொய்தா அமைப்பின் பயங்கரவாதி ஆவார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டில் வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் பைசல் அகமது உள்பட 3 பேருக்கு வங்காளதேச கோர்ட்டு தூக்கு தண்டனை வழங்கி இருந்தது. ஆனால் பைசல் அகமது வங்காளதேசத்தில் இருந்து எல்லை வழியாக தப்பி இந்தியாவுக்கு வந்தார்.

அசாமில் முதலில் வசித்து வந்த அவர் பின்னர் பெங்களூருவுக்கு வந்து பொம்மனஹள்ளி பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி உள்ளார். மேலும் இங்கு ஆட்டோவும் ஓட்டி வந்து உள்ளார். மேலும் இந்தியாவில் பிறந்தவர் என்று ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவைகளையும் பைசல் அகமது வாங்கி உள்ளார்.

பெங்களூருவில் கைது

இந்த நிலையில் பைசல் அகமது பெங்களூருவில் வசித்து வருவது பற்றி வங்காளதேச போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் பைசல் அகமதுவை கைது செய்ய வங்காளதேச போலீசார் கொல்கத்தா போலீசாரின் உதவியை நாடினர். இந்த நிலையில் பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசாருக்கு தொடர்பு கொண்டு பேசிய கொல்கத்தா போலீசார் பைசல் அகமது பற்றிய தகவல்களை வழங்கி அவரை கண்காணிக்கும்படி தெரிவித்து இருந்தனர்.

அதன்படி பைசல் அகமதுவின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் பெங்களூரு வந்த வங்காளதேசம், கொல்கத்தா போலீசார் பொம்மனஹள்ளி போலீசாருடன் இணைந்து பைசல் அகமதுவை கைது செய்தனர். பின்னர் அவரை வங்காளதேசத்திற்கு அழைத்து சென்றனர். பெங்களூருவில் கடந்த 7 ஆண்டுகளாக பைசல் அகமது வசித்து வந்து உள்ளார். ஆனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.இதேபோல், 2 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story