மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம்: ஜனதா தளம்(எஸ்) வலியுறுத்தல்


மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம்:  ஜனதா தளம்(எஸ்) வலியுறுத்தல்
x

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஹாசன்:

ஜனதா தளம்(எஸ்) போராட்டம்

ஹாசன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏராளமான விளை நிலங்கள் நாசமானது. மேலும் சாலைகள், ேமம்பாலங்கள் சேதமடைந்தன. ஆனால் அந்த இடங்களை இதுவரை அரசு தரப்பில் யாரும் சென்று பார்வையிடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் உரிய நிவாரணத்தொகை வழங்கவில்லை. இதனை கண்டித்து நேற்று ஹாசன் மாவட்டம் ஹேமாவதி சாலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான கே.எஸ்.லிங்கேஷ், எச்.கே.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பேசிய அவர்கள் கூறியதாவது:-

கர்நாடக மாவட்டத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக ஹாசன் மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை பெய்தது. இதில் நிலச்சரிவு ஏற்பட்டது மட்டுமல்லாமல், சாலைகள், ேமம்பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. வரியை ரத்து...

அதேபோல நெற்பயிர்கள், காபி செடிகள், ஏலக்காய் உள்பட பல்வேறு விவசாய பயிர்கள் மழையால் நாசமானது. 450 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகின. 250 ஹெக்டேர் விளை நிலங்கள் மூழ்கியது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவில்லை. அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தால் மட்டும் போதுமா?. உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டாமா?.

இதுவரை பா.ஜனதாவை சேர்ந்த எந்த தலைவரும் ஹாசன் மாவட்டத்திற்கு வந்து மழை வெள்ள சேதங்களை பார்வையிடவில்லை. விலை வாசி உயர்வை குறைக்க வேண்டும். உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story