இடி-மின்னலுடன் பெய்த கனமழைக்கு மின்னல் தாக்கி 7 ஆடுகள் செத்தன
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பெய்த கனமழைக்கு, மின்னல் தாக்கி 7 ஆடுகள் செத்தன.
கோலார் தங்கவயல்:
ஏரி, குளங்கள் நிரம்பின
கர்நாடகம் முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் பருவமழை ஆரம்பமாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்கிறது. தொடர் கனமழையால் பல்வேறு தாலுகாக்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பின.
பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சாலையில் ஓடியது. தாழ்வான பகுதிகளில் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பொழுதை இருட்டில் கழித்தனர்.
இரவு முழுவதும் பெய்த கனமழையால் விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
20-க்கும் மேற்பட்ட...
இந்த நிலையில் மாதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா. விவசாயி. இவர் தனது வீட்டில் அருகில் கொட்டகை அமைத்து 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த கனமழைக்கு, வெங்கடப்பா வளர்த்து வந்த 7 ஆடுகள் மின்னல் தாக்கி செத்தன. இதுகுறித்து அறிந்ததும் வெங்கடப்பா கால்நடை டாக்டரை அழைத்து ஆடுகளை பரிசோதித்தார்.
அப்போது ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு சார்பில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வெங்கடப்பா, கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாா். அதிகாரிகளும் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.