ரஷியாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, பின்வாங்கிய கூலிப்படை தலைவர் எங்கே? பெலாரஸ் அதிபர் தகவல்


ரஷியாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, பின்வாங்கிய கூலிப்படை தலைவர் எங்கே?  பெலாரஸ் அதிபர் தகவல்
x

Image Courtacy: ANI

ரஷியாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, பின்னர் பின்வாங்கிய கூலிப்படை தலைவர் பிரிகோசின் எங்கே என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட்டது, வாக்னர் குழு என்ற கூலிப்படை. இதன் தலைவரான யெவ்ஜெனி பிரிகோசின், தங்கள் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டி அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியை அறிவித்தார்.

அதேவேகத்தில் பின்வாங்கி, கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்.

அவர் அண்டை நாடான பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு சென்றதை பிரிகோசினோ, பெலாரஸ் அதிகாரிகளோ உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், ஒரு சுயேச்சையான பெலாரஸ் ராணுவ கண்காணிப்பு அமைப்பான பெலாரஸ்கி ஹாஜுன், பிரிகோசினின் ஜெட் விமானம், பெலாரஸ் தலைநகரான மின்ஸ்க் அருகே நேற்று காலை வந்திறங்கியதாக தெரிவித்துள்ளது.

'புரட்சிக்கு முயலவில்லை'

பிரிகோசின் நேற்று முன்தினம் வெளியிட்ட ஓர் ஆடியோவில், கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயலை நியாயப்படுத்தினார். ரஷிய ராணுவத்தை அவர் மீண்டும் விமர்சித்தபோதும், புதினுக்கு எதிராக தான் புரட்சி செய்ய முயலவில்லை என்று கூறினார்.

கூலிப்படை வீரர்களுக்கு புதின் பாராட்டு

அன்று இரவு தொலைக்காட்சியில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரிகோசினின் பெயரை குறிப்பிடாமல், கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனின் கைப்பாவையாக செயல்பட்டதாக விமர்சித்தார். அதேநேரத்தில், பெரிய ரத்தக்களறியை தவிர்த்ததாக தனியார் படை வீரர்களை பாராட்டவும் செய்தார்.

இதற்கிடையில், தனியார் படையின் கிளர்ச்சி குறித்த குற்றவியல் விசாரணையை ரத்து செய்வதாக ரஷிய அதிகாரிகள் நேற்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின் பெலாரசில் இருக்கிறார் என்று அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.


Next Story