மணிஷ் சிசோடியாவை பொய் வழக்கில் கைது செய்வதா? - வைகோ கண்டனம்
டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது பொய் வழக்கு புனைந்து, மத்திய புலனாய்வு நிறுவனத்தை ஏவிவிட்டு பா.ஜ.க. அரசு கைதுசெய்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
2021-22-ம் ஆண்டுக்கான டெல்லி மதுபானக்கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் முறைகேடு நடந்ததாகக்கூறி டெல்லி கவர்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார். ஆனால் மதுபானக் கொள்கையை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கைவிட்ட பிறகும், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் டெல்லியில் கவர்னர் மூலம் பா.ஜ.க. இரட்டை ஆட்சி நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருகிறது. அடக்குமுறை மூலம் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கலாம் என்று பா.ஜ.க. நினைப்பது பகல் கனவாகவே முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.