பீகார் வன்முறை போராட்ட பின்னணியில் பயிற்சி மையங்கள்... திடுக் தகவல்


பீகார் வன்முறை போராட்ட பின்னணியில் பயிற்சி மையங்கள்... திடுக் தகவல்
x

பீகாரில் வன்முறை போராட்டத்திற்கு பின்னணியில் பயிற்சி மையங்களின் பங்கு உள்ளது என அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார்.



பாட்னா,



அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டம் அறிவித்து 4 நாள் கடந்து இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது.

பீகார், உத்தர பிரதேசம், அரியானா மற்றும் தெலுங்கானாவில் பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்களும் பரவலாக நடந்துள்ளன.

பீகாரின் சம்பரான் மாவட்டத்தின் பச்சிம் பகுதியில் துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு மீதும், பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்ஜய் ஜெய்ஸ்வாலின் இல்லம் மீதும் கும்பல் ஒன்று நேற்று தாக்குதல் நடத்தி சென்றது. பீகாரில் உள்ள ரெயில் நிலையம் ஒன்றின் டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், பீகாரில், அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு தலைமையிலான மாணவ அமைப்புகள் 24 மணிநேர முழு அடைப்புக்கு இன்று அழைப்பு விடுத்தன. இதற்கு ராஷ்டீரிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்தது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மன்ஜியின் மதசார்பற்ற இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியும் உள்ளது. போராட்டம் பற்றி மன்ஜி கூறும்போது, வன்முறைக்கு ஆதரவில்லை. ஆனால், இளைஞர்கள் நலனை முன்னிட்டு முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்போம் என கூறினார்.

இந்நிலையில், வன்முறையாக மாறிய போராட்டத்திற்கு பின்னணியில் பயிற்சி மையங்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் இறங்கிய நபர்கள் பலரது வாட்ஸ்அப் செய்திகளை ஆய்வு செய்தோம். அவற்றில் 7 முதல் 8 பயிற்சி மையங்களின் பங்கு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாங்கள் முழு அளவில் விழிப்புடன் இருக்கிறோம்.

வீடியோ பதிவுகளின் வழியே அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். இந்த வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் போராட்ட நபர்களை இயற்கையாகவே தூண்டி விடும் வகையில் உள்ளன என கூறியுள்ளார்.

எனினும், நிலைமை சீரடைந்து வருகிறது என கூறியுள்ள பீகார் துணை முதல்-மந்திரி தர்கிஷோர் பிரசாத், அமைதியை பேண வேண்டும் என போராட்டக்காரர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.


Next Story