தொழிலாளியை கொன்ற காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகள் இன்று வருகை


தொழிலாளியை கொன்ற காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகள் இன்று வருகை
x

மூடிகெரே தாலுகாவில், தொழிலாளியை கொன்ற காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகள் இன்று(வியாழக்கிழமை) வரவழைக்கப்பட உள்ளன.

சிக்கமகளூரு;

கிராம மக்கள் பீதி

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பைராபுரா கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக ஒரு காட்டுயானை சுற்றி வருகிறது. கடந்த வாரம் அந்த காட்டுயானை உருபகே கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அர்ஜூன் என்பவரை காலால் மிதித்து கொன்றது.

இதனால் அப்பகுதி கிராம மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் அவர்கள் அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மூடிகெரே வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கல்வீசி தாக்குதல்

போராட்டத்தின் போது கிராம மக்கள் வனத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நிலைமை எல்லைமீறி சென்றதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நிலைமையையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் அரசிடம் அனுமதி கோரினர். அதன்பேரில் அரசும் அந்த காட்டுயானையை பிடிக்க அனுமதி வழங்கியது.

இன்று வருகை

இதையடுத்து சக்ரேபைலு யானைகள் முகாமில் இருந்து இன்று(வியாழக்கிழமை) கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளன. அந்த யானைகளைக் கொண்டு காட்டுயானையை பிடிக்கும் பணியில் ஈடுபட இருப்பதாகவும், விரைவில் அதை பிடித்து விடுவோம் என்றும் வனத்துறை அதிகாரி மஞ்சுநாத் தெரிவித்தார்.


Next Story