பெங்களூருவில் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில், கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1¼ கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கார் கண்ணாடியை உடைத்து....
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரகுவனஹள்ளி பகுதியில் ஒரு வக்கீல் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த தங்கம், வைர நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.இதுகுறித்து வக்கீல் அளித்த புகாரின்பேரில் தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
சென்னையில் கைது
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த கொள்ளையில் ஒரு பெண் உள்பட 3 பேர் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் ஆந்திர மாநிலம் ஓ.ஜி.குப்பம் கிராமத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஓ.ஜி.குப்பம் பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் சென்னையில் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சென்னைக்கு சென்று அங்கு ஓட்டலில் பதுங்கி இருந்த பெண் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
ரூ.1.22 கோடி நகைகள் பறிமுதல்
விசாரணையில் அவர்கள் ஓ.ஜி.குப்பத்தை சேர்ந்த ரத்னகுமார் என்கிற ரத்னம் (வயது 40), அவரது மனைவி தாசின் பாத்திமா என்கிற தனு (36), இவரது சகோதரர் முகமது ஹர்ஷத் நதீம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வக்கீலின் கார் கண்ணாடியை உடைத்து நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் சில கார்களின் கண்ணாடிகளை உடைத்து கார்களில் இருந்த நகைகளை 3 பேரும் திருடியதும் தெரியவந்தது.
இதுதவிர வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடிப்பதை 3 பேரும் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை போலீசார் மீட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.