சுத்தியால் தாக்கி மகனை கொன்று விவசாயி தற்கொலை


சுத்தியால் தாக்கி மகனை கொன்று விவசாயி தற்கொலை
x

உப்பள்ளியில் மனைவி, குழந்தைகளை தாக்கி சுத்தியால் தாக்கிவிட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இதில் மகன் உயிரிழந்தான். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உப்பள்ளி:-

குடும்ப தகராறு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா சுள்ளா கிராமத்தை சேர்ந்தவர் பக்கீரப்பா (வயது 38). விவசாயி. இவரது மனைவி முதகவ்வா ( 32 ). இந்த தம்பதிக்கு ஓம் ஸ்ரீயாஸ்( 7 ) உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்கீரப்பா, வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து மனைவி முதகவ்வா மற்றும் மகன் ஓம் ஸ்ரீயாஸ் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கினார். அவர்களின் அலறல் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக டி.வி.யின் சத்தத்தை அதிகமாக வைத்திருந்தார்.

கொலை-தற்கொலை

இந்த தாக்குதலில் சிறுவன் ஓம் ஸ்ரீயாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். மேலும், பக்கீரப்பா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், டி.வி. சத்தம் அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பக்கீரப்பாவின் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது பக்கீரப்பா தூக்கில் பிணமாக கிடந்தார். மேலும் ஓம் ஸ்ரீயாஸ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மற்ற 3 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்கீரப்பா மற்றும் சிறுவன் ஓம் ஸ்ரீயாசின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story