குடகு, தார்வாரில் மழை பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு


குடகு, தார்வாரில் மழை பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
x

குடகு, தார்வாரில் மழை பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குடகு;


தொடர் கனமழை

கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு, குடகு, மைசூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், தண்ணீரில் மூழ்கி பயிர்களும் நாசமாகி உள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய குழுவினர் ஆய்வு

இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் கர்நாடகம் வந்துள்ளனர். நேற்று மத்திய குழுவினர் குடகு மாவட்டத்துக்கு சென்று மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் ஆஷிஷ்குமார், மத்திய நிதி அமைச்சக துணை இயக்குனர் மகேஷ்குமார், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் உதவி இயக்குனர் பவ்யா பாண்டே தலைமையிலான குழுவினர் வந்திருந்தனர்.

மடிகேரி தாலுகாவில் சீமேஹல்லு, கார்டோஜி, கொய்நாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

3 குழுவாக பிரிந்து..

மத்திய குழுவினருடன் மாவட்ட கலெக்டர் சதீசும் சென்றிருந்தார். அப்போது அவர் மத்திய குழுவினரிடம் மழை பாதிப்புகள் குறித்த விரிவான தகவல்களை அளித்தார்.இந்த நிலையில் கர்நாடக பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் கூறுகையில், கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகிறார்கள். மழை பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி உள்ளார் என்றார்.


தார்வாரிலும் ஆய்வு

இதேபோல் தார்வார் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மற்றொரு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் ஹெப்பசூர், காலவாடி, எமனூர், ஹெண்ணூர், போகனூர், அன்னிகேரி, பசவபுரா உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அந்த பகுதிகளில் இடிந்த வீடுகள், சேதமடைந்த பாலங்கள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.


Next Story