தெலுங்கானா சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு; காரை பறிமுதல் செய்த போலீசார்
தெலுங்கானா சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பயன்படுத்தப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சொகுசு ஓட்டலில் கடந்த மாதம் 25ந்தேதி நடந்த தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 17 வயது சிறுமி சென்றுள்ளார்.
இதில், 18 வயதுக்கு உட்பட்ட 80 பேர் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி சொகுசு காருக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இந்த பலாத்கார சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிறுவர் ஒருவரும் உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் எம்.எல்.ஏ.வின் மகனும் உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
எம்.எல்.ஏ.வின் மகனும், சிறுபான்மை வாரிய தலைவரின் மகனும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் சிறுமியுடன் இருந்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
போலீசார் போக்சோ சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.
முதலில் போலீசார் மானபங்க வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் மனநல டாக்டரிடம் அந்த சிறுமி பேசியபோது, தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதனால், கூட்டு பலாத்கார வழக்காக மாற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஐதராபாத் போலீசார் 3 பேரை கைது செய்து உள்ளனர். சதுதீன் மாலிக்கை போலீசார் முதலில் கைது செய்தனர். தொடர்ந்து மேலும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். பள்ளி மாணவரான இவர்களில் ஒருவன் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் உள்ளூர் தலைவரின் மகன் ஆவார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இன்னோவா வகை கார் ஒன்றை ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது. முதலில் இந்த வழக்கில், மெர்சிடிஸ் பென்ஸ் ரக சிவப்பு காரில் பலாத்காரம் நடந்தது என கூறப்பட்டது.
இந்நிலையில், இன்னோவா காரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த காரில் நம்பர் பிளேட் இருக்கும் இடத்தில் எண்கள் எதுவும் இல்லாமல் காலியாக விடப்பட்டு உள்ளது. பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விசாரணையை மூடி மறைக்க சதி நடக்கிறது என குற்றச்சாட்டு கூறியது. போராட்டத்திலும் ஈடுபட்டது. இந்நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.