கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சுவப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு


கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சுவப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
x

பினராய் விஜயன் ராஜினாமா செய்து, நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கோரிக்கை வைத்து உள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சமீபத்தில் சுவப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கர்,மற்றும் இந்த வழக்கில் முதல் மந்திரியின் மனைவி கமலா, மகள் வீணா, முதல்வரின் முன்னாள் தனிச் செயலாளர் சி.எம்.ரவீந்திரன், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், நளினி நெட்டோ ஆகியோருக்கு தங்கல் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் என்னென்ன செய்துள்ளனர் என்பது பற்றியும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நாட்டிலேயே முதன்முறையாக முதல்-மந்திரி ஒருவர் பிரியாணி பாத்திரத்தில் தங்கம் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. பினராய் விஜயன் ராஜினாமா செய்து, நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கோரிக்கை வைத்து உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த பினராயி விஜயன் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி தான். பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.சில குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என கூறினார்.

இந்த நிலையில் சுவப்னா சுரேஷ் தங்க கடத்தில் தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என்ற கூறப்படும் ஷாஜ் கிரண், சுவப்னா சுரேஷுடன் பேசுவது போல் உள்ளது. அதில், நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தலில் முதல் மந்திரி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடா்புள்ளது என்ற குற்றச்சாட்டை பினராயி விஜயன் சகித்துக்கொள்ள மாட்டாா். எனவே, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சுவப்னா சுரேஷிடம் ஷாஜ் கிரண் பேசுவது பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக ஷாஜ் கிரண் கூறுகையில், சுவப்னா சுரேஷ் வெளியிட்டுள்ள ஆடியோவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உண்மையான ஆடியோவை நான் வெளியிடுவேன். அந்த உரையாடலின் முழுமையான ஆடியோ பதிவைக் கேட்டால் மட்டுமே உண்மை புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story