காங்கிரஸ் வேட்பாளர் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு?
மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாவள்ளி சித்தேகவுடா, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்து இருப்பதாக சித்தராமையா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மைசூரு:-
காங்கிரஸ் வேட்பாளர் மாவள்ளி சித்தேகவுடா
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஜி.டி.தேவேகவுடா போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாவள்ளி சித்தேகவுடா போட்டியிட்டு இருக்கிறார். முன்னதாக இவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து வந்தார். தேர்தலின்போது அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட ஜனதா தளம்(எஸ்) கட்சி மேலிட தலைவர்களிடம் டிக்கெட் கேட்டு வந்தார்.
ஆனால் அவருக்கு கட்சி மேலிட தலைவர்கள் டிக்கெட் வழங்கவில்லை. இதனால் அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகினார். மேலும் அவர் காங்கிரசில் சேர்ந்தார். அதுமட்டுமின்றி சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட டிக்கெட்டும் கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற கர்நாடக காங்கிரஸ் மற்றும் கட்சி மேலிட தலைவர்கள் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட அவருக்கு டிக்கெட் வழங்கினர்.
தேர்தல் பிரசாரம்
அதையடுத்து அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பகிரங்க பிரசாரம் ஓய இருந்த கடைசி 2 நாட்களில் மாவள்ளி சித்தேகவுடா பிரசாரத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் மறைமுகமாக ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்ததாகவும், அதற்காக அவர் பல கோடி ரூபாய் பணம் பெற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.
இதுபற்றி நேற்று கருத்து தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, மாவள்ளி சித்தேகவுடா பிரசாரத்தில் ஈடுபடாதது குறித்து பேசி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மாவள்ளி சித்தேகவுடா ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அதறாக அவர் ஜி.டி.தேவேகவுடாவிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று இருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரகசிய கூட்டணி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி.டி.தேவேகவுடா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் அவர் தான் யாரிடமும் ரகசிய கூட்டணி வைக்கவில்லை என்றும், அப்படி ஒரு அவசியம் தனக்கு தேவை இல்லை என்றும் கூறினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் காங்கிரஸ் வேட்பாளர் மாவள்ளி சித்தேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மீதான காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறாமையில் சிலர் என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள். இதனால் சித்தராமையா என் மீது கோபமாக இருக்கிறார். என்னை திட்டி இருக்கிறார். நான் சித்தராமையாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன்.
குடும்ப பிரச்சினை
நான் யார் வீட்டு வாசலுக்கும் செல்லவில்லை. யாரிடமும் பணம் கேட்டு நிற்கவில்லை. நேற்று(நேற்று முன்தினம்) சித்தராமையாவை சந்தித்து என் தரப்பு நியாயத்தை விளக்கி கூற முயற்சித்தேன். ஆனால் அவர் அதற்குள் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அதனால் அவரை சந்திக்க முடியவில்லை. அவர் மைசூருவுக்கு வந்த உடன் அவரை நான் நேரில் சந்தித்து பேசுவேன். தேர்தலுக்கு கடைசி 2 நாட்கள் இருக்கும்போது நான் குடும்ப பிரச்சினையில் சிக்கிக் கொண்டேன்.
என் உடன்பிறந்தவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக கவலை அடைந்திருந்தோம். அதனால் நான் கடைசி 2 நாட்களுக்கு பிரசாரத்துக்கு செல்லவில்லை.
துரோகம் செய்ய மாட்டேன்
காங்கிரசுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை நான் அப்படி செய்திருந்தால் நானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன். சித்தராமையா,மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். இது சத்தியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உப்பு மீது சத்தியம் செய்த மாவள்ளி சித்தேகவுடா
மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாவள்ளி சித்தேகவுடா, மறைமுகமாக ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்காரணமாக அவர் நேற்று மைசூருவில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று கூறி உப்பு மீது சத்தியம் செய்தார்.