பேக்லிஹொசஹள்ளி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு சித்தராமையா வாழ்த்து
சிறந்த பணிக்காக காந்தி புரஸ்கார் விருது பெற்ற பேக்லிஹொசஹள்ளி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா வாழ்த்து தெரிவித்தார்.
கோலார்
கிராம சபை கூட்டம்
கோலார்(மாவட்டம்) தாலுகாவிற்கு உட்பட்டது பேக்லிஹொசஹள்ளி கிராம பஞ்சாயத்து. இந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம், பொது சேவை, சுகாதாரம், கிராம சபை கூட்டம் நடத்துதல், தொலைநோக்கு திட்டம், குழந்தைகள் நலன், பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி உள்ளது.
மேலும் மத்திய அரசின் 138 திட்டங்கள், மாநில அரசின் கட்டளைகள் அனைத்தையும் இந்த கிராம பஞ்சாயத்து திறம்பட செயல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த கிராம பஞ்சாயத்து காந்தி கிராம புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
புரஸ்கார் விருது
டெல்லியில் நடந்த விழாவில் இந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் காந்தி கிராம புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. அதையடுத்து நேற்று பெங்களூருவில் இந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சித்தராமையா பேசியதாவது:-
பேக்லிஹொசஹள்ளி கிராம பஞ்சாயத்து குழந்தைகள் நலனில் முக்கிய அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. குழந்தைகள் நலனுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது.
நடன கலைஞர்கள்
குழந்தைகளுக்கான விழா, விளையாட்டு போட்டிகள், பிரதீபா கார்ன்ஜி, சுகாதாரம் என பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது.
கிராம சபை கூட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடத்தில் தெரிவித்து அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்று திட்டங்கள் குறித்து விவரிப்பார்கள்.
ஆனால் பேக்லிஹொசஹள்ளி கிராம பஞ்சாயத்தில் நாடகம் மற்றும் நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நாடகம், சுவர் ஓவியம் போன்றவை மூலம் அரசின் திட்டங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
குப்பை கழிவுகள்
மேலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது. கர்நாடகத்திலேயே முதல் முறையாக குப்பை கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களில் பெண்களை டிரைவர்களாக பணியில் அமர்த்தியது பேக்லிஹொசஹள்ளி கிராம பஞ்சாயத்து தான்.
அதுபோல் குப்பை கழிவுகளை சேகரித்து அவற்றை நிர்வகித்து தூய்மையாக வைத்துக் கொள்வதிலும் மெச்சத்தகுந்த பணியை செய்திருக்கிறார்கள்.
மேலும் கிராம பஞ்சாயத்துக்கான வரி வசூலையும் 80 சதவீதம் அளவில் எட்டி அசத்தி இருக்கிறார்கள். இதுபோல் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.