உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்: மலிவான முறையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று
உத்தர பிரதேசத்தில் மலிவான முறையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புதுடெல்லி,
பொதுமக்களில் இளைஞர்கள் உள்ளிட்ட சிலர் பச்சை குத்தி கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி பச்சை குத்தி கொள்ளும்போது சில ஆபத்து விளைவிக்கும் விசயங்களும் உள்ளன. பச்சை குத்தும்போது, அதற்காக பயன்படுத்தப்படும் ஊசி தூய்மையான முறையில் இருக்கிறதா? என தெரிந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மலிவான கட்டணத்தில் பச்சை குத்தி கொள்ள செல்வோர் ஆபத்துகளில் சிக்குகின்றனர். இதனால், உயிர்க்கொல்லி நோய் தொற்று ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடந்துள்ளது. இதுபற்றி பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் மருத்துவர் பிரீதி அகர்வால் கூறும்போது, பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் மற்றும் நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் உள்பட 14 பேர் மலிவான விலையில் பச்சை குத்தி கொண்டதில் அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
அவர்களுக்கு மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், எந்த பயனும் இல்லை. காய்ச்சல் குறையவே இல்லை. முடிவில், எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது, அதில் தொற்று இருப்பது அனைவருக்கும் உறுதியானது.
இவர்களில் ஒருவருக்கும் பாலியல் ரீதியிலான தொடர்பிலோ அல்லது தொற்று ஏற்பட்டவரின் ரத்தம் வழியேவோ பாதிப்பு ஏற்படவில்லை. சமீபத்தில் அவர்கள் அனைவரும் பச்சை குத்தி கொண்டனர் என்பதே அவர்களுக்கு இடையேயான பொதுவான ஒரு விசயம் ஆகவுள்ளது.
அவர்களுக்கு பச்சை குத்திய நபர், ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்தி உள்ளார். இந்த ஊசிகள் விலை உயர்ந்தவை. அதனால், பணம் மிச்சப்பட வேண்டும் என்பதற்காக பச்சை குத்துபவர்கள் ஒரே ஊசியை பயன்படுத்துவது வழக்கம். எப்போதும் பச்சை குத்தி கொள்பவர்கள், அது நல்ல தரமுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய ஊசியா என சோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரீதி அறிவுறுத்துகிறார்.