சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது: சிறப்பு கமிஷனர் பேட்டி
சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும், அதனால் அந்த மைதானத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் கூறியுள்ளார்.
பெங்களூரு: சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும், அதனால் அந்த மைதானத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் கூறியுள்ளார்.
பதற்றமான சூழல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மலாலி மசூதி இருக்கும் இடத்தில் சிவன் கோவில் இருந்ததாக அங்குள்ள சில இந்து அமைப்புகள் பிரச்சினை கிளப்பி வருகின்றன. அதேபோல் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள மசூதி இருக்கும் இடத்தில் முன்பு ஆஞ்சநேயர் கோவில் இருந்ததாகவும், அதை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனால் ஸ்ரீரங்கப்பட்டணாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இந்துமத நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சில இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் அங்கு சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றவும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரியுள்ளன. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஹரிஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிற நிகழ்ச்சிகள்
சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது. அதன் பாதுகாவலர் மேற்கு மண்டல இணை கமிஷனர் ஆவார். நான் அவரிடம் பேசினேன். ஆண்டில் 2 நிகழ்ச்சிகளுக்காக முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் பிற நிகழ்ச்சிகளை அங்கு அனுமதிக்க முடியும். அது ஒரு விளையாட்டு மைதானம். ஆண்டிற்கு 2 நாட்கள் அந்த குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு உள்ளது.
இணை கமிஷனரின் அனுமதி பெற்று பிற நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். யாராவது அங்கு நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால் அதுகுறித்து ஒரு வரைவு அறிக்கையை மாநகராட்சிக்கு அனுப்பலாம். அதுபற்றி நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு ஹரிஷ்குமார் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி
சிறப்பு கமிஷனரின் இந்த கருத்தை இந்து ஜனஜாக்ருதி சமிதி செய்தித்தொடர்பாளர் மோகன் கவுடா வரவேற்றுள்ளார். ஆனால் அந்த மைதானம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமல்லாமல் பிற மத நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படும் என்று எழுத்து மூலமாக கூற வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.
அனைத்து இந்திய இந்து சங்கடன் அமைப்பு, யோகா தினம், சுதந்திர தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு கேட்போம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.