சிக்கமகளூருவில் மழை நிவாரண பணிகள் விரைவாக நடந்து வருகிறது; கலெக்டர் ரமேஷ் தகவல்


சிக்கமகளூருவில் மழை நிவாரண பணிகள் விரைவாக நடந்து வருகிறது; கலெக்டர் ரமேஷ் தகவல்
x

முதல்-மந்திரியின் அறிவுறுத்தலின்பேரில் சிக்கமகளூருவில் மழை நிவாரண பணிகள் விரைவாக நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

சிக்கமகளூரு;

ஆலோசனை கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேசும் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழை பாதிப்புகள்

சிக்கமகளூரு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி கேட்டறிந்தார். அப்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்தும், என்.ஆர்.புரா, சிருங்கேரி, கொப்பா ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் மழை பெய்திருப்பது குறித்தும் முதல்-மந்திரியிடம் கூறினேன்.

பள்ளிக்கட்டிடங்கள், பள்ளிகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து இருப்பது குறித்தும் முதல்-மந்திரி கேட்டறிந்தார்.மேலும் மழைப்பொழிவு அதிக அளவில் இருப்பதால் தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும், உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்கும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே செய்தேன்.


நிவாரண பணி

மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலங்களை உடனடியாக சீரமைக்கவும், மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி உத்தரவிட்டார்.

மேலும் நிவாரண பணிகளை விரைந்து செய்யும்படியும், நிவாரண உதவிகளை காலதாமதம் இன்றி வழங்கும்படியும் கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்-மந்திரியின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன.

இவ்வாறு கலெக்டர் ரமேஷ் கூறினார்


Next Story