தோட்டத்திற்கே சென்று விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்; மழையிலும் நடைபயணம் நீடித்தது


தோட்டத்திற்கே சென்று விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்; மழையிலும் நடைபயணம் நீடித்தது
x

கர்நாடகத்தில் 12-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரை நடந்த நிலையில் விவசாய தோட்டங்களுக்கே நேரில் சென்று விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

பெங்களூரு:

ஒற்றுமை பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று ஹீரேஹள்ளியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் காரில் வந்து பொம்மகொண்டனஹள்ளியில் இருந்து தனது 36-வது மற்றும் கர்நாடகத்தில் 12-வது நாள் பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தொடங்கியபோது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

அதையும் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கிருந்து இந்த பாதயாத்திரை 12 கிலோ மீட்டர் கடந்து சென்ற நிலையில் 11 மணிக்கு கன்சகாரா பகுதியில் ராகுல் காந்தி ஓய்வு எடுத்தார்.

ஓய்வு எடுத்தார்

5 மணி நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு கன்சகாரா பகுதியில் இருந்து தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 6 மணிக்கு மொலகால்மூரு கே.இ.பி. காலனிக்கு வந்தது. அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வனப்பகுதி காரணமாக ராகுல் காந்தி அங்கிருந்து கார் மூலம் 24 கிலோ மீட்டர் பயணித்து ராம்புராவுக்கு வந்தார். அங்குள்ள அம்ருதா விடுதியில் நேற்று இரவு அவர் தங்கினார்.

இந்த பாதயாத்திரையின்போது, ராகுல் காந்தியை பெண்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். நேற்றைய பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் திருநங்கைகளும் கலந்து கொண்டனர். சில இடங்களில் ராகுல் காந்திக்கு பெண் குழந்தைகள் பூரண கும்ப மரியாதை வழங்கினர். குறிப்பாக விவசாயிகளின் தோட்டத்திற்கே சென்ற ராகுல் காந்தி அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அந்த குறைகளை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

என்ஜினீயர்கள்

திறமையான இளைஞர்களை இன்று (நேற்று) சந்தித்தேன். அதில் சிலர் என்ஜினீயர்கள், எம்.பி.ஏ. பட்டதாரிகள் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் வேலை இல்லாமல் இருப்பவா்கள். அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அது தான் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும். பிரதமர் மோடியின் முன்னுரிமை, 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இல்லை.

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.


Next Story