இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து முதலீட்டாளா்களை ராகுல் காந்தி தடுக்கிறாா் - சம்பித் பத்ரா
இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து முதலீட்டாளா்களை ராகுல் காந்தி தடுக்கிறாா் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 தினங்களுக்கு முன் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளித்து கூறியதாவது:-
இந்தியாவை வா்ணிக்க ஒட்டுமொத்த உலகமும் நல்வாா்த்தைகளைப் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை; நீதித்துறையும் ஊடகமும் மோசமான வடிவில் உள்ளன என்று வெளிநாட்டில் இந்தியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் பேசியுள்ளாா். உலக அரங்கில் பாகிஸ்தான்கூட இந்தியா குறித்து இதுபோல பேச தற்போது துணிவதில்லை. ஆனால் மிகப் பெரிய பல்கலைக்கழகத்தில் இந்தியா குறித்து ராகுல் காந்தி மோசமாக பேசியுள்ளாா்.
இந்தியாவை ஒளிமயமான இடமாக உலகம் பாா்க்கிறது. வணிகம் மேற்கொள்ள சீனாவிலிருந்து வெளியேறி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வருகின்றன. இவ்வேளையில், இந்தியாவில் முதலீடு செய்வதில் இருந்து முதலீட்டாளா்களை ராகுல் காந்தி தடுக்கிறாா்.
இந்தியாவில் சிறுபான்மையினா் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா். இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க எந்த அடிமட்டத்துக்கும் அவரும், அவரின் குடும்பத்தினரும் செல்வாா்கள் என்பதையே இது காண்பிக்கிறது. குடும்ப கட்சியின் பிரகாசமான குழந்தையாக அவா் இல்லை என்பதால் இந்தியாவும் பிரகாசமான இடத்தில் இல்லை என்று அா்த்தமல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.