மும்பை: ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்
கோவிலுக்கு அருகில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்திற்கு ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். மும்பைக்கு அருகில் உள்ள நாசிக் காலாராம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை வருகை தந்தார். பின்னர் அவரை கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவர் விநாயகப் பெருமானுக்கும் ராமருக்கும் பூஜை செய்து ஆரத்தி செய்தார்.
இதையடுத்து, கோவிலில் நடத்தப்பட்ட பஜனை மற்றும் கீர்த்தனையில் பங்கேற்றார். மேலும் தரிசனத்திற்கு பிறகு கோவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்கு சால்வை, பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு, வெள்ளி ராமர் சிலை மற்றும் கோவில் தெய்வங்களான ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் புகைப்படங்களை வழங்கினர்.
பின்னர், கோவிலுக்கு அருகில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கோவில் தரிசனத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி 27வது தேசிய இளைஞர் விழாவின் தொடக்க விழா நடைபெறும் தபோவன் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.