பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - மனிதாபிமான உதவி அளிப்பதாக உறுதி
பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவியை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.
புதுடெல்லி,
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போரில், கடந்த 17-ந் தேதி, அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. காசாவில் உள்ள அல்-அக்லி ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், சுமார் 470 பேர் பலியானார்கள். உலக தலைவர்கள் பலர் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் அதிர்ச்சி தெரிவித்தார். தாக்குதலுக்கு காரணமானவர் யார் என்பது தொடர்பாக இஸ்ரேலும், ஹமாஸ் படையினரும் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, காசா ஆஸ்பத்திரி தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம், வன்முறை நிலவுவது குறித்தும், பாதுகாப்பு சூழ்நிலை சீர்குலைந்து வருவது பற்றியும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால கொள்கைரீதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். பாலஸ்தீன அதிபருடன் பேசிய விவரங்களை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.