காரில் பெப்பர் ஸ்பிரே வைத்திருந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார்
காரில் பெப்பர் ஸ்பிரே வைத்திருந்த நபரை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
ஆடுகோடி:
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் நள்ளிரவில், ஆடுகோடி பகுதியில் தனது நண்பருக்காக காரில் காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஆடுகோடி போலீசார் காரில் இருந்த நபரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் காரில் சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் பெப்பர் ஸ்பிரே இருந்தது. இதுபற்றி அந்த நபரிடம் கேட்ட போது, அந்த நபர் பெப்பர் ஸ்பிரே வைத்திருப்பது குற்றமா? என்று போலீசாரிடம் கேட்டு உள்ளார்.
அப்போது கொள்ளையர்கள் தான் பெப்பர் ஸ்பிரே வைத்திருப்பார்கள் என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. இதற்கு அந்த நபர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் அந்த நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதை அந்த நபர் செல்போனில் வீடியோவும் எடுத்து உள்ளார். அப்போது போலீசார் வீடியோவை அழிக்கும்படி அந்த நபரிடம் கூறியுள்ளனர். அதன்படி அந்த நபரும் வீடியோவை அழித்து உள்ளார். பின்னர் ஒரு போலீஸ்காரர் வீடியோவை வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனக்கு நேர்ந்தது மோசமான அனுபவம் என்று கூறிய அந்த நபர், டுவிட்டர் மூலம் ஆடுகோடி போலீசார் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்து உள்ளார்.