இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு ஐதராபாத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நீடித்து வரும் சூழலில், கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையால் நாட்டில் அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதன்பின்னர் நிலைமை சீரானது. எனினும், ஒமைக்ரான் வகை பரவலால் நாட்டில் 3வது அலை ஏற்பட்டது. இதன் பாதிப்புகளும் சமீப காலங்களாக குறைந்து வருகின்றன. எனினும், 4வது அலைக்கான சாத்தியம் பற்றி நிபுணர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விசயங்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு ஐதராபாத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி இந்திய சார்ஸ்-கோவி-2 மரபியல் கூட்டமைப்பு (ஐ.என்.எஸ்.ஏ.சி.ஓ.ஜி.) உறுதி செய்து வெளியிட்டுள்ள செய்தியில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஐதராபாத்துக்கு வந்த நபர் ஒருவருக்கு இந்த பிஏ.4 வகை கொரோனாவானது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவருக்கு அறிகுறிகள் இல்லை. அவரிடம் இருந்து கடந்த 9ந்தேதி மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறியும் பணி முன்பே தொடங்கி விட்டது என தெரிவித்து உள்ளது.
இந்த புதிய வகை கொரோனாவை அடையாளம் காணும் பணியும் மரபணு ஆய்வகங்களில் நடந்து வருகின்றன. இதுபற்றி ஐ.என்.எஸ்.ஏ.சி.ஓ.ஜி. அமைப்பு வருகிற திங்கட்கிழமை மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிடும்.
தென்ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட 5வது கொரோனா அலைக்கு ஒமைக்ரானின் இந்த பிஏ.4 மற்றும் பிஏ.5 வகையே காரணம் என அறியப்பட்டது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வகை கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.