தென்மேற்கு பருவமழை தொடங்கம்; அரசு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக் கூடாது - ராஜேகவுடா எம்.எல்.ஏ.


தென்மேற்கு பருவமழை தொடங்கம்; அரசு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக் கூடாது - ராஜேகவுடா எம்.எல்.ஏ.
x

 Image Courtesy : PTI (file photo)

தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 4:02 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அரசு அதிகாரிகள் வெளியூர், வெளி மாவட்டத்திற்கு செல்ல கூடாது என்று ராஜேகவுடா எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிக்கமகளூரு

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா டவுன் சிருங்கேரி தொகுதியை சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடா. நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் இவர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜேகவுடா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம். சிக்கமகளூருவில் மழை நேரங்களில் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் மழை நீர் கிராமங்களுக்குள் வரக்கூடும். அப்போது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

எனவே மழை நேரங்களில் ஆறுகளையொட்டியுள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மழை பாதிப்பு அதிகம் இருந்தால், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சென்றுவிடவேண்டும். மேலும் ஆற்றங்கரையோரங்களில் மண் சரிவு ஏற்படும். இந்த நேரத்தில் யாரும் ஆற்றங்கரையோரங்களுக்கு செல்ல கூடாது. விவசாய நிலங்களை பொறுத்தவரையில் மழை நீரால் அதிகளவு விளை நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பணியில் இருக்கவேண்டும்

இருப்பினும் அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டியது நமது கடமை. எனவே எந்த பாதிப்புகளும் ஏற்படாதவாறு மாவட்ட, தாலுகா, கிராம பஞ்சாயத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். சீரமைக்கப்படாத கால்வாய்களை தூர்வாரி, மழை நீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யவேண்டும். ஒவ்வொரு தாலுகா, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் கால்வாய்களை சீரமைத்து இருக்கவேண்டும்.

தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது மாவட்ட, தாலுகா, கிராம பஞ்சாயத்து அதிகாரிகளின் பொறுப்பு. மழை காலங்களில் அரசு அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்க கூடாது. மேலும் வெளியூர்களுக்கும், வெளி மாவட்டத்திற்கும் செல்ல கூடாது. அனைவரும் பணியில் இருக்கவேண்டும். இந்த உத்தரவை மீறி அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story