கோடை மழையால் பெரிய அளவில் பாதிப்பில்லை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் பேட்டி
சிக்பள்ளாப்பூரில் கோடை மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று மந்திரி எம்.டி.பி.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
சிக்பள்ளாப்பூர்;
பெரிய பாதிப்பு இல்லை
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து நேற்று பொறுப்பு மந்திரி எம்.டி.பி.நாகராஜ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்தது. இதில், திராட்சை, தக்காளி, காய்கறி, பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகின. சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கோடை மழை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 302 ஹெக்டேரில் காய்கறிகள், திராட்சை, பூக்கள், தக்காளி உள்ளிட்ட பல்வேறு விளைச்சல்கள் நாசமாகி உள்ளன. சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் திராட்சை சாகுபடி வெகுவாக பாதித்துள்ளது. விளைச்சல்களை இழந்த விவசாயிகளுக்கு அரசு விரைவில் இழப்பீட்டு தொகையை விடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை
சிக்பள்ளாப்பூர் தாலுகா, அரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நஞ்சேகவுடாவுக்கு சொந்தமான 3 ஏக்கர் திராட்சை தோட்டம் நாசமானதை பார்த்த மந்திரி எம்.டி.பி.நாகராஜ், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு சொந்த பணம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்து உதவினார்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து நிருபர்கள் மந்திரி எம்.டி.பி.நாகராஜிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தலுக்கும், பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.