கர்நாடகத்தில் நக்சலைட்டு ஒழிப்பு படை நீக்கப்படாது; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தகவல்


கர்நாடகத்தில் நக்சலைட்டு ஒழிப்பு படை நீக்கப்படாது;  போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தகவல்
x

கர்நாடகத்தில் நக்சலைட்டு ஒழிப்பு படை நீக்கப்படாது என்று உள்துறை மந்திரி அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

மந்திரி அரக ஞானேந்திரா

மாநில போலீஸ்துறை மந்திரி அரக ஞானேந்திரா, சிக்கமகளூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்தார். இதையடுத்து அவர், சிக்கமகளூரு பார்லைன் சாலையில் போலீசார் விடுதி கட்டும் பணிகள் நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், காண்டிராக்டர்களிடம் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கவும், தரமானதாக கட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள போலீஸ் ரவுண்டானாவை திறந்து வைத்தார். பின்னர் சிக்கமகளூரு குவெம்பு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நக்சலைட்டுஒழிப்பு படை

சிக்கமகளூரு போலீசாருக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ேமலும் குற்றச்சம்பவங்களை தடுக்க கூடுதலாக 100 போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். பிரதமர் மோடி குறித்து சித்தராமையா பேசியது கண்டிக்கத்தக்கது. போலீஸ் ரவுண்டானாவை திறந்து வைப்பது எனக்கு பெருமையாக உள்ளது.

நாட்டில் மற்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள் அட்டகாசம் இருந்து வருகிறது. கர்நாடகத்தில் நக்சலைட்டுகள் அட்டகாசத்தை தடுக்க அதன் ஒழிப்பு படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்சலைட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். கர்நாடகத்தில் நக்சலைட்டு ஒழிப்பு படை நீக்கம் செய்யப்பட உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது. நச்சலைட்டு ஒழிப்பு படை நீக்கப்படாது. அந்த எண்ணம் அரசுக்கு இல்லை.

நடவடிக்கை

கர்நாடகத்தில் மேலும் சில நக்சைலட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் சிலர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சரணடைந்துள்ளனர். ஆகையால் மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளின்போது சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு அக்சய் மச்சீந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story