இந்தியாவில் தயாரிக்கும் தேசிய கொடிகளை பயன்படுத்தவேண்டும்; காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பேட்டி


இந்தியாவில் தயாரிக்கும் தேசிய கொடிகளை பயன்படுத்தவேண்டும்; காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பேட்டி
x

கர்நாடக மக்கள் இந்தியாவில் தயாரிக்கும் தேசிய கொடிகளை பயன்படுத்தவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி;

காதி தொழிற்சாலை

உப்பள்ளி மற்றும் பெலகாவி பகுதிகளில் கட்சி பணிகள் மற்றும் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிருபர்களை சந்தித்து பேசிய டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

அகில இந்திய அளவில் காந்தி காதி கிராம உத்யோக மைய தொழிற்சாலையில் 60 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். கதர் ஆடை தயாரிப்பில் இந்த தொழிற்சாலைத்தான் முதல் இடம். தேசிய கொடிகள் உற்பத்தி செய்யும் பணியும் இங்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த முறை வீடு வீடாக சென்று தேசிய கொடிகள் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அதிகளவு இந்தியாவில் தயாரிக்கப்படும் தேசிய கொடிகளை பயன்படுத்தவேண்டும். சீனா போன்ற வெளி நாடுகளில் தயாரிக்கும் கொடிகளை பயன்படுத்த கூடாது.

தனியாருக்கு தாரை வார்ப்பு

இந்தியாவிலேயே பெங்கேரி மற்றும் பாகல்கோட்டையில் தான் தேசிய கொடிகள் அசோக சக்கரத்துடன் அச்சிடப்படுகிறது. அசோக சக்கரத்துடன் தேசிய கொடி அச்சடிக்கும் உரிமத்தை பா.ஜனதா அரசு தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலம் என்னவாகும்? ஏற்கனவே அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கூடுதல் நேரம் வேலை பார்க்கின்றனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு செயல்படவேண்டும்.

இந்த காதி தொழிற்சாலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிடவேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். விரைவில் அவர் வருவார். அதேபோல காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் சுதந்திர தினவிழாவை கொண்டாடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story