'ஒயிட் காலர்' குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது; சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு கருத்து


ஒயிட் காலர் குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது; சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு கருத்து
x

அனில் தேஷ்முக் ஜாமீன் மனுவை நிராகரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு ‘ஒயிட் காலர்' குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என கூறியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மும்பையில் உள்ள ஓட்டல், பார் உரிமையாளர்களிடம் ரூ.100 கோடி மாமூல் கேட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்தநிலையில் அவர் ஜாமீன் கேட்டு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவரது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று முன்தினம் நிராகரித்தது. தற்போது கோர்ட்டு உத்தரவின் முழு விவரம் நேற்று வெளியானது.

இதில் அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனுவை நிராகரித்தது தொடர்பாக கோர்ட்டு கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் பெரிய அளவிலான பணம் சம்மந்தப்பட்டு இருப்பது தெரிகிறது. இதுபோன்ற 'ஒயிட் காலர்' குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. எனவே இதுபோன்ற குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரத்தை சிதைக்கும் பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை எனில் அது ஒட்டு மொத்த தேசத்தையும் பாதிக்கும்.

உணர்ச்சிவசப்படும் நேரத்தில் நொடி பொழுதில் கொலை குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் பொருளாதார குற்றங்கள் சமூகத்துக்கு ஏற்படும் விளைவுகளை பொருட்படுத்தாமல், தனிநபரின் லாபத்தை கருத்தில் கொண்டு வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story