திருவள்ளுவர் மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு


திருவள்ளுவர் மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. நேற்று திருவள்ளுவர் மார்க்கெட் மற்றும் ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்கள், வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ராபர்ட்சன்பேட்டை

திருவள்ளுவர் மார்க்கெட்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையில் திருவள்ளுவர் மார்க்கெட் அமைந்துள்ளது. நேற்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் திடீரென திருவள்ளுவர் மார்க்கெட்டுக்கு வந்தார். அவர் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதையடுத்து அவர் ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவர் அங்கிருந்தவர்களிடம் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஏன் பஸ் நிலையத்துக்கு வருவதில்லை என்று கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் பலரும் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வராதது குறித்த காரணம் தெரிவித்து குற்றம்சாட்டினர். இதையடுத்து பொதுமக்களிடம் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ரூ.6 கோடி நிதி

கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியான பைரதி சுரேசிடம் ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தின் அவலநிலை குறித்து எடுத்துக்கூறி விரைவில் அந்த பஸ் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.

பஸ் நிலையத்தை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கும்படி கோரிக்கை வைக்கப்படும். அந்த நிதியின் மூலம் பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். ராபர்ட்சன்பேட்டையில் இருந்து ஆண்டர்சன்பேட்டைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல வழிவகை செய்யப்படும்.

கோரிக்கை

ஆண்டர்சன்பேட்டையில் உள்ள மார்க்கெட் விரைவில் புதுப்பிக்கப்படும். மார்க்கெட்டில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலையத்தில் 20 ஆண்டுகளாக திறக்கப்படமால் மூடிக்கிடக்கும் ராஜீவ்காந்தி சிலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக ஏற்கனவே கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

குறிப்பாக அடிப்படை வசதி குறைபாடு தான் அங்கு அதிகமாக உள்ளது. மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்கள். போலீசார் மிரட்டுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ரோந்து பணியில் ஈடுபட உத்தரவு

வியாபாரிகளை மிரட்டும் வகையில் யாராவது நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.இரவு நேரங்களில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story