பொதுமக்களிடம் மந்திரி எச்.சி.மகாதேவப்பா குறைகளை கேட்டறிந்தார்
மைசூருவில் ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இ்தில், மந்திரி எச்.சி. மகாதேவப்பா கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மைசூரு
ஜனதா தரிசனம் நிகழ்ச்சி
மைசூருவில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சமூகநலத்துறை மந்திரியுமான எச்.சி.மகாதேவப்பா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தன்வீர் சேட், ஜி.டி.தேவேகவுடா, ஸ்ரீவத்ஷா, கே. ஹரிஷ் கவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவின்படி ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் வேலையில்லா பட்டதாரிகள், ஓய்வு ஊதிய தொகை, சொத்து தகராறு உள்ளிட்ட பல மனுக்கள் மந்திரி எச்.சி.மகாதேவப்பாவிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.
இதில் சில மனுக்களை அந்த இடத்திலேயே மந்திரி எச்.சி.மகாதேவப்பா தீர்த்து வைத்தார். அரசின் சலுகைகள் கிடைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு மாதங்களுக்குள் அந்த பிரச்சினை சரி செய்யப்படும், என்றார்.
கண்ணீர் மல்க...
இந்த நிகழ்ச்சியில் மைசூரு என்.ஆர். ெமாஹல்லா ராஜேந்திரா நகரை சேர்ந்த வெங்கட்டம்மா (வயது83) கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார்.
அதில், எனக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. நான் மகன்கள் வீட்டில் வசித்து வருகிறேன். இந்தநிலையில் மகன்கள் என்னை கவனிப்பதில்லை.
மேலும் என்னிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தை அவர்கள் ஏமாற்றி வாங்கினர். அந்த சொத்தை 3 பேரும் பங்கு போட்டுள்ளனர்.
மேலும் சாமுண்டி மலையில் தனக்கு சொந்தமான 5 கடைகளை எழுதி வாங்கி உள்ளனர். ஆனால் தற்போது என்னை அவர்கள் கவனிக்காமல் தனியாக விட்டுள்ளனர்.
நடவடிக்கை
இதுதொடர்பாக கோர்ட்டு, என்னை மகன்கள் கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை எல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
எனவே என்னை மகன்கள் கவனிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மந்திரி எச்.சி.மகாதேவப்பா மைசூரு மாநகர போலீஸ் கமிஷனரிடம் தொலைபேசியில் பேசினார்.
அதில், இதுசம்பந்தமாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டார்.