மாநகராட்சி தேர்தலில் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஓட்டு போட முடியவில்லை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி
பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் ஜனநாயக அமைப்பை சீரழிக்க முயற்சிக்கின்றன’ என குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஓட்டு போடுவதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் அனில் குமார் சவுத்ரி, 193-வது வார்டுக்கு உட்பட்ட டல்லுபுராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ.வான தனது பெயரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த தகவல் காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனில் குமார் சவுத்ரி, ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா கட்சிகளை சாடினார்.
அவர் கூறுகையில், 'வாக்காளர் பட்டியலிலும், நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் எனது பெயர் இல்லை. எனது மனைவி ஓட்டு போட்டார். பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் ஜனநாயக அமைப்பை சீரழிக்க முயற்சிக்கின்றன' என குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சேர்ந்து மாநில தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து புகார் அளித்தனர். ஆனால் டெல்லி வாக்காளர் பட்டியல் மத்திய தேர்தல் கமிஷன் தயாரித்ததால், இந்த விவகாரத்தில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.