ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மீது லோக் அயுக்தாவில் புகார்


ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மீது லோக் அயுக்தாவில் புகார்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு கட்டியதில் விதி மீறியது குறித்து நடவடிக்கை எடுக்காத ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மீது லோக் அயுக்தாவில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் மையமாக ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு கொத்தனூர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டது. அந்த குடியிருப்பு 2 திட்டங்களாக பிரிக்கப்பட்டு கட்டப்பட்டது. முதல் திட்டத்தில் 2½ ஏக்கர் நிலப்பரப்பில் குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. 2-வது திட்டத்தில் 2¼ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகளில் பலர் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு வாசியான சைலேஷ் சாரடி என்பவர் லோக் அயுக்தாவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பெங்களூரு மாநகராட்சி அனுமதியுடன் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் கொத்தனூர் குடியிருப்பு கட்டிடங்கள் முறையாக திட்டமிடப்பட்டு கட்டப்படவில்லை.

அந்த திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. பொதுவாக ஒரு குடியிருப்பு, கட்டப்படும் நிலம் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில், அந்த நிலத்தில் 15 சதவீதத்தை பூங்கா உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் கொத்தனூர் குடியிருப்பில் கூடுதல் நிலம் இருந்தும் அதை 2 திட்டங்களாக பிரித்து, மாநகராட்சிக்கு தெரியாமல் நிலத்தை மோசடி செய்துள்ளனர். ஆனால் இந்த முறைகேட்டை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரிக்க மறுக்கிறது. எனவே ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகார் அளித்தார்.


Next Story