வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு
கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
பெங்களூரு,
வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் கர்நாடக அரசு நிவாரணம் கேட்டு இருந்தது. மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த நிவாரணமும் வரவில்லை. இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால், கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் மழை பெய்யாததால் வறட்சி நிலவுவதாகவும், பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், நிவாரண நிதி வழங்க கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது.
இதையடுத்து 10 அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கர்நாடகத்திற்கு வருகை தந்து வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தி சென்றிருந்தனர். மத்திய நிபுணர்கள் குழுவினர் கர்நாடகத்தில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி இருந்தார்கள்.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை கர்நாடகத்திற்கு நிவாரணம் வரவில்லை. அதனால் வறட்சி நிவாரண நிதியை கர்நாடகத்திற்கு வழங்கும்படி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக 32-வது சட்ட விதிகளின்படி கர்நாடக அரசு சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.