ஜெயலலிதாவின் உதவியாளர் பாஸ்கரனிடம் இருக்கும் 29 வகையான பொருட்களை மீட்க வேண்டும்-பெங்களூரு சமூக ஆர்வலர் கடிதம்
சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் உதவியாளர் பாஸ்கரனிடம் இருக்கும் 29 வகையான பொருட்களை மீட்க வேண்டும் என்று கர்நாடக சட்டத்துறை செயலாளருக்கு, சமூக ஆர்வலர் கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு:-
ஜெயலலிதா பொருட்கள் ஏலம்
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், புடவைகளை கர்நாடக அரசு ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கர்நாடக அரசு தரப்பு வக்கீலாக கிரண் எஸ்.ஜவலியும் நியமிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க கோரி ஜெ.தீபாவும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தார். அதே நேரத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 30 பொருட்களில் விலை உயர்ந்த தங்க நகைகள், பிற ஆபரணங்கள் மட்டுமே கர்நாடக அரசின் கருவூலத்தில் இருப்பதாகவும், மற்ற 29 பொருட்கள் பற்றி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நரசிம்மமூர்த்திக்கு தகவல் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
உதவியாளரிடம் ஒப்படைப்பு
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 29 வகையான பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருக்கு கடிதம் எழுதினர்.
அதில், நீங்கள் குறிப்பிட்டுள்ள 29 வகையான பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான, ஜெயலலிதாவின் உதவியாளரான வி.பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சட்டத்துறை செயலாளருக்கு கடிதம்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டத்துறை செயலாளருக்கு நரசிம்மமூர்த்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், அவரது உதவியாளரான வி.பாஸ்கரனிடம் கடந்த 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைத்து இருந்தனர். இந்த பொருட்களை ஒப்படைக்கும் போது சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தனர். அதாவது தாங்கள் ஒப்படைத்துள்ள பொருட்களை கோர்ட்டில் திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த பொருட்களை வி.பாஸ்கரன் இன்னும் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை. எனவே வி.பாஸ்கரனிடம் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான 29 வகையான பொருட்களை மீட்டு கர்நாடக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு, அந்த பொருட்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.