ஜூன்12-ல் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்..!


ஜூன்12-ல் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்..!
x

ஜூன்12ல் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லல்லு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 12-ந்தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளும் கலந்து கொள்வார்கள். என்றாலும் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களையும் நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை. என்றாலும் ஒருமித்த கருத்துக்களுடன் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 38 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. மீதமுள்ள 62 சதவீத வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பெற்று இருந்தன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார். குறிப்பாக மொத்தம் உள்ள 543 எம்.பி. தொகுதிகளில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளிலாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

450 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக பாரதிய ஜனதாவை தனி பெரும்பான்மை பெறவிடாமல் செய்ய முடியும் என்று நிதிஷ்குமார் மாநில கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் மாநில கட்சி தலைவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிராக இருப்பதால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா? என்று சந்தேகம் நீடிக்கிறது.


Next Story