தட்சிண கன்னடாவில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு


தட்சிண கன்னடாவில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை;   அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு
x

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.

மங்களூரு;

ஆலோசனை கூட்டம்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆறு, ஏரி, குளங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திராவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக கலெக்டர் ராஜேந்திரா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திரா பேசியதாவது:-

செல்போன் செயலி

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து எனக்கு புகார்கள் வருகின்றன. அரசு அனுமதியுடன் செயல்படும் குவாரிகளில் மணல் விற்பனை நடக்கிறது.

அனுமதி பெற்றவர்கள் நடத்தும் குவாரிகளில் மணல் வாங்குவதை விடுத்து, சட்டவிரோதமாக மணல் கடத்துவது தவறு. மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக அரசு சார்பில் புதிதாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த செயலி மூலம் நுகர்வோர் வாங்கும் மணல் அளவு மற்றும் அதன் விலை பதிவேற்றம் செய்யப்படும். மேலும் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படும்.

அட்யப்பாடி அணையில் உள்ள பல்குனி ஆற்றுப்படுகை மற்றும் ஷம்பூர் அணை பகுதிகளில் இருந்து நுகர்வோருக்கு மணல் விற்பனை செய்யலாம்.

கண்காணிப்பு கேமரா கட்டாயம்

பள்ளி பகுதிகள் வழியாக மணல் எடுத்து செல்லும் வாகனங்கள் மெதுவாக கவனமுடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு வாரமும் மணல் இருப்பு, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்கனவே மணல் பெற்றவர்கள் குறித்த அறிக்கை அதிகாரிகள் மூலம் சமர்பிக்க வேண்டும்.

மணல் அள்ளும் இடங்களிலும், மணல் ஏற்றும் இடங்களிலும் கண்காணிப்பு கேமராவை கட்டாயம் பொருத்த வேண்டும். மணல் அள்ளி செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story