இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ- காங்கிரஸ்;மிக ஏழை எம்.எல்.ஏ.-பா.ஜனதா...!
இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார எம்.எல்.ஏ மற்றும் ஏழை எம்.எல்.ஏ-க்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்புAssociation for Democratic Reforms (ஏடிஆர்) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார எம்.எல்.ஏ மற்றும் ஏழை எம்.எல்.ஏ-க்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு;-
இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ-க்களில் முதலிடத்தைப் பிடிக்கும் எம்.எல்.ஏ கர்நாடகாவின் துணை முதல் மந்திரியாக உள்ள டி.கே.சிவகுமார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி. இரண்டாவது இடத்தில் கர்நாடகாவின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான கே.எச்.புட்டஸ்வாமி கவுடா. இவரின் சொத்து மதிப்பு ரூ.1,267 கோடி. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் பிரியா கிருஷ்ணா ரூ.1,156 கோடி சொத்து மதிப்புகொண்டவர்.
இந்தியாவின் மிக ஏழையான எம்.எல்.ஏ பட்டியலில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-வான நிர்மல் குமார் தாரா. இவரால் அறிவிக்கப்பட்ட சொத்து விவரத்தில் ரூ.1,700 மட்டுமே இருக்கிறது. அவரைத் தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ-வான மகரந்தா முதுலி. இவரின் சொத்து மதிப்பு ரூ.15,000.
அவருக்கு அடுத்த இடத்தில் பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் நரிந்தர் பால் சிங் சவுனா. இவரின் சொத்து மதிப்பு ரூ.18,370.
முதல் பத்து இடங்களில் இருக்கும் பணக்கார எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள்.
நாட்டின் 20 பணக்கார எம்.எல்.ஏ-க்களில், 12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 14 சதவிகிதம், கோடீசுவரர்கள். அதாவது குறைந்தபட்சம் ரூ.100 கோடி சொத்துமதிப்பு கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம், 59 எம்.எல்.ஏ-க்களில் 7 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் இதில் இடம்பிடித்து உள்ளனர்.