இந்தியாவின் மாபெரும் டிரோன் திருவிழா: பிரதமர் மோடி டுவிட்


இந்தியாவின் மாபெரும் டிரோன் திருவிழா: பிரதமர் மோடி டுவிட்
x

கோப்புப்படம்

இந்தியாவின் மாபெரும் டிரோன் திருவிழாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் மாபெரும் டிரோன் திருவிழாவை டெல்லியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். புதுடெல்லி, இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022' நாளை மற்றும் நாளை மறுநாள் (மே 27,28) இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த மாபெரும் டிரோன் திருவிழாவை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கிசான் டிரோன் விமானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார். அதன் பின்பு டிரோன் கண்காட்சி மையத்தில் உள்ள ஸ்டார்ட்அப்களுடன் கலந்துரையாடுவார்.

இந்நிலையில் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஆர்வமுள்ள அனைவரையும் நிகழ்ச்சியைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நாளை, மே 27ஆம் தேதி காலை 10 மணிக்கு நான் பாரத் டிரோன் மஹோத்சவ் 2022 இல் பங்கேற்பேன். இந்தத் துறையில் இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை இந்த மன்றம் ஒன்றிணைக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஆர்வமுள்ள அனைவரையும் நிகழ்ச்சியைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப் படைகள், மத்திய ஆயுதப் படைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் டிரோன் ஸ்டார்ட் அப்கள் என 1600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த டிரோன் திருவிழாவில் பங்கேற்பார்கள். கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்டவர்கள் டிரோன்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவார்கள்' என்று தெரிவித்திருந்தது.


Next Story