சீன ராணுவ மந்திரி 27-ம் தேதி இந்தியா வருகை


சீன ராணுவ மந்திரி 27-ம் தேதி இந்தியா வருகை
x

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ராணுவ மந்திரி 27-ம் தேதி இந்தியா வருகிறார். ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ராணுவ மந்திரிகள் கூட்டம்

டெல்லியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் ராணுவ மந்திரிகள் கூட்டம் நடக்கிறது. 27 மற்றும் 28-ந் தேதிகளில் இக்கூட்டம் நடக்கிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா இடம்பெற்றுள்ளது. எனவே, அழைப்பின்பேரில் சீன ராணுவ மந்திரி லி ஷாங்பு, அதில் பங்கேற்கிறார். அதற்காக வியாழக்கிழமை இந்தியா வருகிறார். லி ஷாங்பு, சீன அதிபர் ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார். எனவே, அவரது இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிலும், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா படைகள் எதிரும், புதிருமாக நிற்கும் நிலையில், அவர் இந்தியா வருகிறார்.

ராஜ்நாத்சிங்

இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கை லி ஷாங்பு சந்திக்கிறார். அப்போது, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கிழக்கு லடாக் பிரச்சினையில், ராணுவ, தூதரக பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்தும், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் இருவரும் விவாதிக்கிறார்கள்.

கூட்டத்துக்கு வரும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களையும் லி ஷாங்பு சந்தித்து பேசுகிறார். பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்.

இந்த தகவல்களை சீன ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story