'இன்சாட் -3டிஎஸ்' செயற்கைகோளுடன் அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை,
காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான 'இன்சாட் -3டிஎஸ்' செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத்தாண்டில் கடந்த 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் 'எக்ஸ்போசாட்' என்ற 'எக்ஸ்-ரே போலரிமீட்டர்' என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6-ந்தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்14 என்ற ராக்கெட்டில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. திரவ உந்துசக்தியைப் பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. தற்போது ராக்கெட்டில் செயற்கைகோள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இன்சாட்-3 டிஎஸ் செயற்கைகோள்
இந்திய வானிலை அமைப்புக்கு (ஐ.எம்.டி.) சொந்தமானது 'இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள். காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை உள்ளடக்கியது. இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3 டிஆர் இவை ஏற்கனவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்ட சுற்றுப்பாதையில் உள்ளன. அடுத்ததாக தற்போது இன்சாட்-3 டிஎஸ் விண்ணில் ஏவப்பட உள்ளது.
8 மாதங்களுக்கு பிறகு ஜி.எஸ்.எல்.வி.
கடந்த ஆண்டு மே 29-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி.- எப்12 ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிசெலுத்தும் என்.வி.எஸ்-01 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.