தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் மனு வரும் 1-ந் தேதி விசாரணை


தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் மனு வரும் 1-ந் தேதி விசாரணை
x

தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் மனு 1-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

பெரும்பாவூர்,

தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் சமீபத்தில் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் மற்றும் அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கு தொடர்பு உள்ளதாக பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கொச்சியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஸ்வப்னா சுரேசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்துகொண்டனர். மேலும் தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல், கூட்டு சதி ஆகிய 3 வழக்குகள் குறித்து ஸ்வப்னா சுரேசிடம் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் விசாரணையில் தன்னை கைது செய்யக்கூடும் என்று கருதி ஸ்வப்னா சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுக்கவில்லை. வருகிற 1-ந் தேதி முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலத்தின் நகலை தரக்கோரி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் கேட்டிருந்தனர். வாக்குமூல நகல் வழங்க இயலாது என கோர்ட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கூட்டு சதி வழக்கு குறித்த விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர். ஆனால், உடல்நிலை சரியில்லாததால் ஸ்வப்னா சுரேஷ் ஆஜராகவில்லை.


Next Story