காந்தி அமைதி விருது அறிவிப்பு: ரூ.1 கோடி பரிசை ஏற்க கீதா பதிப்பகம் மறுப்பு


காந்தி அமைதி விருது அறிவிப்பு: ரூ.1 கோடி பரிசை ஏற்க கீதா பதிப்பகம் மறுப்பு
x

கோப்புப்படம்

காந்தி அமைதி விருதுக்கு வழங்கப்படும் ரூ.1 கோடி பரிசை ஏற்க கீதா பதிப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோரக்பூர்,

2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள 'கீதா பிரஸ்' பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை வெளியிட்டு வருகிறது. இது கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுவது கேலிக்கூத்து என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோட்சே, சாவர்க்கருக்கு விருது வழங்குவது போன்றது என கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்து உள்ளது.

இந்த நிலையில், காந்தி அமைதி விருதுடன் வழங்கப்படும் ரூ.1 கோடி பரிசுத்தொகையை ஏற்கமாட்டோம் என கீதா பதிப்பகம் அறிவித்து உள்ளது. எந்த வகையிலான நன்கொடையும் ஏற்பது இல்லை என்பதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவதால், இந்த தொகையை ஏற்க முடியாது என பதிப்பக மேலாளர் லால்மணி திரிபாதி கூறியுள்ளார். அதேநேரம் விருதை நிச்சயம் வாங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story