ஜி-20 உச்சி மாநாடு: குரங்குகளை விரட்ட நூதன முறை; நகராட்சி கவுன்சில் முடிவு


ஜி-20 உச்சி மாநாடு:  குரங்குகளை விரட்ட நூதன முறை; நகராட்சி கவுன்சில் முடிவு
x

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டில் குரங்குகளை வரவிடாமல் விரட்ட நகராட்சி கவுன்சில் நிர்வாகம் நூதன முறையை கையாள முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பிற நாடுகளை சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதனால், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய விமான படையின் போர் விமானங்கள் உள்பட அனைத்து பாதுகாப்பு முகமைகளும் இணைந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்களும் வரவுள்ள நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லியில் குரங்குகள் எண்ணிக்கை சற்று அதிகம். அது மாநாடு நடைபெறும் பகுதியில் உள்ளே புகுந்து கலகம் ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுபற்றி புதுடெல்லி நகராட்சி கவுன்சில் துணை தலைவர் சதீஷ் உபாத்யாய் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான லங்கூர் இன குரங்குகளின் உருவம் கொண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

இவை எந்தளவுக்கு குரங்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தும் என நாங்கள் பொறுத்திருந்து பார்க்க இருக்கிறோம். ஏனெனில், லங்கூர் இன குரங்குகளை பார்த்து, இந்த குரங்குகள் பயப்படும்.

அதனால், நகரில் சர்தார் பட்டேல் மார்க் மற்றும் சாஸ்திரி பவன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த கட்-அவுட்டுகளை வைத்திருக்கிறோம். இதனால், குரங்குகள் அவற்றை பார்த்து, பயந்துபோய், தங்களுடைய பழைய இடத்திற்கே திரும்பி போய் விடும்.

குரங்குகளை இடம் பெயர செய்யவோ, அவற்றை துன்புறுத்தவோ அல்லது அடிக்கவோ முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, குரங்குகளை விரட்ட லங்கூரை போல் சத்தம் எழுப்ப கூடிய பயிற்சி பெற்ற பல நிபுணர்களையும் நாங்கள் பல்வேறு இடங்களில் குவித்திருக்கிறோம். ஜி-20 உச்சி மாநாட்டுக்கான வழிகளில், குரங்குகளை விரட்டுவதற்காகவே 30 முதல் 40 வரையிலான பயிற்சி பெற்ற நபர்களை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story