பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் இருந்து ரூ.2¾ கோடியை மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி
பாரத ஸ்டேட் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு ரூ.2¾ கோடியை மாற்றி மோசடி செய்த பரோடா வங்கியின் உதவி மேலாளரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கார்வார்;
உதவி மேலாளர்
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் தாலுகா சிண்டிகேட் பகுதியை சோ்ந்தவர் குமார் போனல்(வயது 33). இவர் உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்புரா பகுதியில் உள்ள பரோடா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் எல்லாப்புராவில் உள்ள கோா்ட்டு ரோடு பகுதியில் வசித்து வந்தார்.
இவர் தன்னுடன் வங்கியில் வேலை செய்யும் சக ஊழியரின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் இருந்து முறைகேடாக பல தவணைகளாக கோடி கணக்கில் அபேஸ் செய்தார். அதாவது அவர் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் அந்த பணத்தை ஆந்திராவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ள தனது மனைவி ரேவதி பிரியங்கா வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார். இந்த செயலை அவர் தொடா்ந்து செய்து வந்துள்ளார்.
ரூ.2.69 கோடி
இதையடுத்து வங்கியின் மேலாளா், பாரத ஸ்டேட் வங்கி கணக்கில் இருந்து பல தவணைகளாக பணம் காணாமல் போனதை கண்டு அதிா்ச்சி அடைந்தார். அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை இந்த பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தனது உதவி மேலாளர் குமார் போனலிடம் கேட்ட போது அவரும் தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
அதன்பிறகு குமார் தலைமறைவானார். இதையடுத்து வங்கி மேலாளர் அந்த பணம் எந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து சோதனை செய்தார். அப்போது பாரத ஸ்டேட் வங்கி கணக்கில் இருந்து, குமாரின் மனைவியின் வங்கி கணக்கிற்கு ரூ.2.69 கோடி மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.
வலைவீச்சு
இதையடுத்து இதுபற்றி எல்லாப்புரா போலீசில் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குமாரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.