டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் உயிரிழப்பு; முதல்-மந்திரி ஷிண்டே இரங்கல்
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே இரங்கல் தெரிவித்து உள்ளார்.
புனே,
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்த்ரி (வயது 54). இவர் மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் ஒன்றில் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து மராட்டியத்தின் மும்பை நகர் நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது கார் பாலம் ஒன்றில் சரோட்டி பகுதியருகே சென்று கொண்டிருந்தபோது, மாலை 3.15 மணியளவில் சாலையின் நடுவே இருந்த பகுதியில் திடீரென மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் சைரஸ் மிஸ்த்ரி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மற்றொருவர் ஜஹாங்கீர் பின்ஷா பந்தோல் என தெரிய வந்துள்ளது. வாகனத்தில் மொத்தம் 4 பேர் பயணம் செய்து உள்ளனர்.
அவர்களில், விபத்தில் காயமடைந்த மற்ற 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தயில், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் மரணம் அடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அவர் ஒரு வெற்றி பெற்ற தொழில் முனைவோராக மட்டுமின்றி, இளம் வயதிலேயே தொழிலதிபராக, தொலைநோக்கு பார்வை கொண்டவராக இருந்தவர். இது ஒரு பேரிழப்பு. எனது அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன் என கூறியுள்ளார்.