மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் நாடு தழுவிய போராட்டம்; டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் நாடு தழுவிய போராட்டம்; டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

டெல்லி உள்பட நாடு முழுவதும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த உள்ள சூழலில், ஜந்தர் மந்தரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. 3 மாதங்களுக்கு பின்னர், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்ட பகுதியில் குடிபோதையில் டெல்லி போலீசார் அவர்களை தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை போலீசார் மறுத்தனர்.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி அந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் தொடரும். அனைத்து வாய்ப்புகளையும் வெளிப்படையாகவே நாங்கள் வைத்திருக்கிறோம். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் என கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்தது.

இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர், போராட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஓராண்டு காலம் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாய அமைப்புகளை, இந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் முன்னெடுத்து சென்றது கவனிக்கத்தக்கது. பின்னர் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

டெல்லியில் நடைபெறும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் இரு தினங்களுக்கு முன் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.


Next Story