குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு; வீட்டில் தீப்பிடித்தது; ரூ.3½ லட்சம் பொருட்கள் நாசம்
காபு அருகே, குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து ரூ.3½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மங்களூரு;
தீ விபத்து
உடுப்பி மாவட்டம் காபு தாலுகா பொலிப்பு கிராமத்தை சேர்ந்தவர் குருராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷகிலா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை குருராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். மேலும் இவரது மனைவி ஷகிலா, குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று இருந்தார்.
அப்போது அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் வீ்டு தீ பிடித்து எரிந்துள்ளது. அதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாளிகளில் தண்ணீர் பிடித்து ஊற்றியுள்ளனர். ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
உடனே அவர்கள் இதுகுறித்து உடுப்பி தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் வீட்டின் உரிமையாளர் குருராஜுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தண்ணீரை பீய்ச்சி அடித்து...
அதற்குள் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அந்த தீ அருகில் உள்ள கிருஷ்ணராஜ் என்பவரின் வீட்டிற்கு பரவியது. இந்த நிலையில் உடுப்பி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து முழுவதுமாக அணைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு காபு போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் வீ்ட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.
ரூ.3½ லட்சம் பொருட்கள்
இதையடுத்து போலீசார் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரித்தனர். இதில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.3½ லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது.
இதுகுறித்து காபு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.